முடிவிலா நினைவுடன் முடிந்ததே கல்லூரி
July 23, 2013
உந்தன் நினைவலை
என்னை நனைக்கையில்
விழித்துக் கொண்டேனடா!
படிப்பும் வாழ்க்கையும்
தந்ததோர் நாற்காலி
வகுப்பறை வரம்தானடா!
என்பெயர் ஒன்றுதான்
புனைப்பெயர் நூறுகள்
பயனற்றுப் போகுமடா!
பசித்திட்ட பலநேரம்
பல்சுவைகள் பலதந்தாய்
மீண்டும் எப்போதடா!
ஆயிரம் ரூபாய்ச் சட்டை
பிடிக்கலை, உந்தன்
அழுக்குச்சட்டை பிடித்ததடா!
வெறுத்துப் போயிருந்த
விடுதிச் சோறும்
உன்தட்டில் அமிர்தமடா!
பிறந்த நாட்களில்
அடிகள் வாங்கவும்
என்மனம் ஏங்குதடா!
இரவு நேரங்கள்
கடக்க மறுக்குதே
உன்கதைகள் வேண்டுமடா!
மொக்கைப் படங்களும்
பட்டையைக் கிளப்புமே
ஆளின்றி கிடக்குதடா!
மாலை நேரத்தில்
நடைபாதை ஓரங்கள்
வெறிச்சோடி போகுமடா!
இடைவேளை நேரத்தில்
இளைப்பாற கொடுத்தாயே,
இனிமேல் இல்லையடா!
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது
நடனங்கள் புரிந்தோமடா!
படித்த பாடங்கள்
மறந்து போகலாம், அந்த
இரவுகள் மறக்காதடா!
பெற்ற புகழிலெலாம்
கரம்பிடித்து உடன்வந்தாய்
நீயுமோர் பங்குதாரனடா!
புகைப்படம் பார்க்கையில்
மலருதே புன்னகை,
நினைவு நீங்காதடா!
நீயெழுதிய புத்தகம்
அருகில்தான் உறங்குதே,
சலித்துப் போகாதடா!
கோபங்கள் மெய்யில்லை
கண்ணீரும் பொய்யில்லை
உறவின்பெயர் நீயடா!
தனிமை நேரங்கள்
தொலைவில் இருப்பினும்
நினைக்க மறக்காதடா!